படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் சாவு
வானகிரி கடலில் மீன் பிடித்து திரும்பியபோது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் பரிதாபமாக இறந்தார்.
திருவெண்காடு:
வானகிரி கடலில் மீன் பிடித்து திரும்பியபோது படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் பரிதாபமாக இறந்தார்.
கடலில் தவறி விழுந்தார்
பூம்புகார் அருகே வானகிரி மீனவர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 5 பேர் நேற்று முன் தினம் மாலை ரங்கசாமி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீனவர்கள் மீன் பிடித்து விட்டு படகில் கரை திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது காவிரி ஆறு கடலோடு சங்கமிக்கும் சங்கமத்துறை நோக்கி படகு வந்து கொண்டிருந்தபோது கடலில் பலத்த காற்று வீசியதாக கூறப்படுகிறது. இதில் அந்த படகில் இருந்த அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜ்குமார் (வயது 19) என்பவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
கரை ஒதுங்கியது
இதையடுத்து பதறிப்போன உடன் வந்த மீனவர்கள் கடலில் இறங்கி அவரை தேடினர். மேலும் தகவறிந்த அந்த பகுதி மீனவர்கள் படகுகளில் சென்று முழுகிய ராஜகுமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று காலை ராஜகுமாரின் உடல் வானகிரி கடற்கரையில் ஒதுங்கியுள்ளது.
தகவலின்பேரில் பூம்புகார் கடற்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமலை மற்றும் போலீசார் விரைந்து சென்று கரை ஒதுங்கிய மீனவர் ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கடலுக்கு சென்று விட்டு கரை திரும்பும்போது கடலுக்குள் தவறி விழுந்து மீனவர் இறந்த சம்பவம் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது