பள்ளம் சுனாமிகாலனியில் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை
பள்ளம் சுனாமிகாலனியில் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலகிருஷ்ணன்புதூர்:
பள்ளம் சுனாமிகாலனியில் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சுசீந்திரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பள்ளம் சுனாமி காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 59), மீனவர். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது. 2-வது மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் மனவேதைனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் நோயால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 2-வது மகள் தனது தாயாருடன் அங்குள்ள தேவாலயத்திற்கு சென்றார். வீட்டில் செல்வராஜ் மட்டும் தனியாக இருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து இருவரும் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் ஒரு அறையில் செல்வராஜ் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் செல்வராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.