6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை:மீனவருக்கு 20 ஆண்டு ஜெயில்
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மீனவருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நாகர்கோவில்:
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மீனவருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
பாலியல் தொல்லை
குமரி மாவட்டம் தூத்தூர் கிராமம் சின்னத்துறை பகுதியை சேர்ந்தவர் ஜோக்லின் (வயது 45), மீனவர். பெற்றோருடன் வசித்து வந்த 6 வயது சிறுமி 22-5-2016 அன்று டி.வி. ரிமோட் செயல்படாததால், அதனை சரி செய்ய ஜோக்லின் வீட்டுக்கு எடுத்து சென்று கொடுத்தாள்.
அப்போது ஜோக்லின் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் பயந்துபோன சிறுமி அங்கிருந்து சத்தமிட்டபடி தப்பி ஓடினாள். பின்னர் இதுபற்றி பெற்றோரிடம் கூறினாள். அதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் நித்திரவிளை போலீசில் புகார் செய்தனர். இதுதொடர்பாக ஜோக்லினை போலீசார் கைது செய்தனர்.
20 ஆண்டு ஜெயில்
இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நிதிபதி சசிரேகா நேற்று தீர்ப்பு கூறினார்.
அதில், குற்றவாளியான ஜோக்லினுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முத்துக்குமாரி ஆஜரானார்.