கார் மோதி மீன்பிடி தொழிலாளி சாவு
கன்னியாகுமரியில் கார் மோதி மீன்பிடி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் கார் மோதி மீன்பிடி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
மீன்பிடி தொழிலாளி
கன்னியாகுமரி சுனாமி காலனி கிளாரட்நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 29). இவர் கடலில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு நண்பரான கன்னியாகுமரி முருகன் குன்றம் அருகே உள்ள சுனாமி காலனியை சேர்ந்த ஆல்பர்ட் (35) என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சிலுவை நகர் பகுதியில் இருந்து நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கன்னியாகுமரி ரெயில்வே மேம்பாலம் அருகே நண்பர் ஆல்பர்டை இறக்கி விட்டு மீண்டும் வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தார்.
கார் மோதி சாவு
அப்போது சிறிது தூரத்தில் அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று அருண் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை தேடி வருகின்றனர்.