கத்தியால் குத்தி மீனவர் கொலை


கத்தியால் குத்தி மீனவர் கொலை
x

பீர்பாட்டிலால் தாக்கியதால் ஏற்பட்ட முன்விரோதத்தில் மீனவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

பீர்பாட்டிலால் தாக்கியதால் ஏற்பட்ட முன்விரோதத்தில் மீனவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

சிறுவர்களுடன் தகராறு

கன்னியாகுமரி அருகே சுனாமி காலனி பகுதியை சேர்ந்தவர் சகாயம் (வயது 50). மீனவரான இவர் மீன்பிடி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். சகாயம் சரியாக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து விட்டு ஊதாரித்தனமாக இருந்து வந்துள்ளார்.

மேலும் குடும்பத்தையும் சரிவர கவனிக்கவில்லை. இதனால் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் அவரை விட்டு பிரிந்தனர். இந்தநிலையில் சுனாமி காலனியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த சகாயம், கடந்த வாரம் வாவத்துறை பகுதியில் கன்னியாகுமரியை சேர்ந்த 14, 17 வயது மதிக்கத்தக்க சிறுவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென பீர்பாட்டிலால் 2 பேரையும் தாக்கியதாக தெரிகிறது. இந்த சம்பவம் சிறுவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தங்களை தாக்கிய சகாயத்தை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என துடித்தனர். மேலும் அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

மீனவர் குத்திக்கொலை

நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி மறக்குடி தெருவில் உள்ள தனியார் விடுதி அருகில் சகாயம் நின்று கொண்டிருந்தார். இதனை கவனித்த 2 சிறுவர்களும் தன்னுடைய நண்பர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு வந்தனர். அந்த நண்பருக்கும் வயது 16 இருக்கும்.

பின்னர் 3 சிறுவர்களும் சேர்ந்து சகாயத்தை தாக்கினர். ஒரு சேர நின்று தொடர்ந்து அடித்து, உதைத்ததால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அந்த தாக்குதலின் உச்சமாக ஆவேசத்துடன் கத்தியை எடுத்து மீனவர் சகாயத்தின் மார்பில் குத்தினர். இதில் துடிதுடித்த அவர் அதே இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலைவெறி தாக்குதல் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது. தாங்கள் நினைத்ததை கச்சிதமாக முடித்ததும் சிறுவர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர்.

3 பேர் கைது

மேலும் சத்தம் கேட்டு ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் திருடிய 3 பேர் கைதுபொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். சகாயம் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 சிறுவர்களையும் கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் மீன்பிடி தொழிலாளிகள். பீர்பாட்டிலால் தாக்கிய தகராறில் மீனவரை கத்தியால் குத்தி சிறுவர்கள் தீர்த்துக்கட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story