மீனவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து பலியான மீனவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதுக்கடை,
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து பலியான மீனவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மீனவர் பலி
இனயம்புத்தன்துறையை சேர்ந்தவர் மீனவர் அமல்ராஜ் (வயது 67). இவர் கடந்த 29-ந் தேதி என்ஜின் இல்லாத சிறிய பைபர் படகில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க சென்றார். அவர் மீன்பிடித்து விட்டு மதியம் துறைமுகத்துக்கு திரும்பி கொண்டு இருந்த போது முகத்துவாரத்தில் மணல் திட்டில் படகு சிக்கி கவிழ்ந்தது. இதில் அமல்ராஜ் கடலில் பரிதாபமாக மூழ்கினார். அவரது உடல் 3 தேடுதல் வேட்டைக்கு பின்பு நேற்று முன்தினம் மீட்கப்பட்டது.
இதற்கிடையே தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை மறு சீரமைப்பு செய்ய வலியுறுத்தி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக ஏலக்கூடத்தில் நேற்றுமுன்தினம் காலையில் இருந்து மீனவர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் இனயம், தூத்தூர் மண்டலங்களை சேர்ந்த 15 கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
அமல்ராஜ் உடல் மீட்கப்பட்டதும், உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசாரிடம் கொடுக்காமல், குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மீனவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
அவர்களிடம் பத்மநாபபுரம் உதவி கலெக்டர் அலர்மேல்மங்கை, துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இறுதியில் இரவு 7.30 மணியளவில் இறந்த மீனவர் உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
உறவினர்களிடம் ஒப்படைப்பு
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மீனவர் அமல்ராஜின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவினர்கள் உடலை சொந்த ஊருக்கு எடுத்து சென்று கல்லறைத்தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கடற்கரை கிராமங்களில் சோகம் நிலவியது.