தூத்துக்குடி கடலில் மீனவர் மாயம்:படகில் மோதிய கப்பல் எங்கே?


தினத்தந்தி 21 Jan 2023 12:15 AM IST (Updated: 21 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கடலில் மீனவர் மாயமான விவகாரத்தில் படகில் மோதிய கப்பல் எங்கே? என கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் படகு மீது மோதிய கப்பல் எங்கே என்று கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

படகு மூழ்கியது

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த சேக்முகமது (வயது 43), ஜெயபால் (45), அண்டோ (45) ஆகியோர் கடந்த 17-ந் தேதி திரேஸ்புரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். கடந்த 18-ந் தேதி காலை 9 மணி அளவில் காயல்பட்டினம் கொம்புதுறையில் இருந்து சுமார் 35 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தார்களாம். அப்போது படகு விபத்தில் சிக்கி மூழ்கி உள்ளது. இதில் ஜெயபால், அண்டோ ஆகிய 2 பேரையும் கொம்புத்துறை மீனவர்கள் மீட்டனர். ஆனால் சேக்முகமதுவை காணவில்லை. அவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்

விசாரணை

இது குறித்து தூத்துக்குடி தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, மீட்கப்பட்ட ஜெயபால், அண்டோ ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பகுதியில் வந்த கப்பல் மோதியதால், படகு சேதம் அடைந்து மூழ்கியதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கடலோர பாதுகாப்பு போலீசார், சம்பவம் நடந்த நேரத்தில் அங்கு கப்பல் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர். இதற்காக வ.உ.சி. துறைமுக ஆணைய அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டு போலீசார் தபால் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படகின் மீது மோதிய கப்பல் எங்கே? என்று துறைமுகத்தில் இருந்து பெறப்படும் விவரங்களின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.


Next Story