மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை


மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வியாழக்கிழமை முதல் மறுஉத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் மறுஉத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் உருவாகிறது. இது இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் 13-ந் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. அதேபோன்று மன்னார் வளைகுடா, தென்தமிழக கடல் மற்றும் குமரி கடற்பகுதிகளில் பகுதியில் சுழல் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், அதிகபட்சமாக 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் கடல் சீற்றமாக காணப்படும். எனவே மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன், வைலா ஆகியோர் மீன்பிடி துறைமுகம், மீனவ கிராமங்களுக்கு வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை குறித்து தகவல் தெரிவித்து உள்ளனர். அதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவித்து உள்ளனர். மீன்இறங்குதளம், மீனவ கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அதே போன்று தூத்துக்குடி மாவட்ட கடலோர அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் உமையொருபாகம் ஒலி பெருக்கி மூலம் திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்களுக்கு அறிவிப்பு செய்தார். மேலும் கடலுக்கு சென்று உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


Next Story