சுருக்குமடிவலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டம்
சுருக்குமடி வலையை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அன்னங்கோவில் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரங்கிப்பேட்டை,
பரங்கிப்பேட்டை அன்னங்கோவிலில் மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு விசைப்படகு பாதுகாப்பு சங்க தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் பரங்கிப்பேட்டை தாலுகாவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது, அதிக குதிரை திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்த கூடாது என்று அரசு ஏற்கனவே கூறியுள்ளது. மேலும் சுருக்குமடி வலை மற்றும் அதிக குதிரை திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்தவும் அரசு தடை விதித்துள்ளது. ஆனால் இதையும் மீறி சில மீனவர்கள் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை மற்றும் அதிக குதிரை திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்தி மீன்பிடிக்கிறார்கள். இதனால் பல மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு விதித்துள்ள தடைகளை மீறி மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
போராட்டம்
மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 30 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மீனவர்களின் படகுகள் கடற்கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டது. தினமும் பரபரப்பாக காணப்படும் அன்னங்கோவில் மீன்பிடிதளம், மீனவர்களின் போராட்டத்தால் நேற்று களையிழந்து காணப்பட்டது.