நடுக்கடலில் மீனவர்கள் மோதல்
படகில் மீன்பிடிக்க சென்ற போது நடுக்கடலில் மீனவர்கள் மோதிக் கொண்டனர். இதுதொடர்பாக 39 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கன்னியாகுமரி:
படகில் மீன்பிடிக்க சென்ற போது நடுக்கடலில் மீனவர்கள் மோதிக் கொண்டனர். இதுதொடர்பாக 39 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மீனவர்கள்
கன்னியாகுமரியை அடுத்த மேல மணக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக சின்னமுட்டம் கடற்கரையில் தங்களது நாட்டு படகுகளை நிறுத்தி வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மேல மணக்குடியைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அப்போது கணவாய் மீன்பிடிப்பதற்காக தென்னை ஆழிகளை கொண்டு சென்றனர். இதற்கு சின்னமுட்டம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தென்னை ஆழியை போட்டால் கடல் மாசுபடும் என அவர்கள் கூறினர்.
நடுக்கடலில் மோதல்
இதனால் மேலமணக்குடி மீனவர்களுக்கும், சின்ன முட்டம் மீனவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இரு தரப்பினரும் நடுக்கடலில் வைத்து மோதிக்கொண்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கன்னியாகுமரி போலீசில் இரு தரப்பினரும் புகார் அளித்தனர். அதன் பேரில் மேலமணக்குடியைச் சேர்ந்த 30 பேர், சின்ன முட்டத்தைச் சேர்ந்த 9 பேர் என 39 பேர் மீது கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.