மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை


மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 5 July 2023 12:15 AM IST (Updated: 5 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரி கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் சின்னமுட்டம், குளச்சல் மீனவர்கள் 2-வது நாளாக நேற்று மீன்பிடிக்கச் செல்லவில்லை.

கன்னியாகுமரி

குளச்சல்:

குமரி கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் சின்னமுட்டம், குளச்சல் மீனவர்கள் 2-வது நாளாக நேற்று மீன்பிடிக்கச் செல்லவில்லை.

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம்

கன்னியாகுமரி அருேக உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமர மீனவர்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் குமரி கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால், ராட்சத அலைகளுடன் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. இதன்காரணமாக சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

2-வது நாளாக...

இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக கடல் பகுதியில் சூறைக்காற்று வீசியது. இதனால், சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் நேற்றும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதேபோல் ஆரோக்கியபுரம், கன்னியாகுமரி, வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களை சேர்ந்த வள்ளம், கட்டுமர மீனவர்களும் மீன்பிடிக்கச் செல்லவில்லை. ேமலும், மீனவர்கள் தங்களது வள்ளத்தை மேடான பகுதிகளுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

குளச்சல்

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார்கள். மேற்கு கடல் பகுதிகளில் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளது. இதனால், குளச்சல் துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகள் கடந்த 35 நாட்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை.

ஆனால், வள்ளம், கட்டுமர மீனவர்கள் வழக்கம்போல் காலையில் மீன்பிடிக்கச் சென்று விட்டு மதியத்திற்குள் கரைக்கு திரும்புவது வழக்கம்.

மீன்பிடி தொழில் பாதிப்பு

குளச்சல் கடல் பகுதியிலும் சூறைக்காற்று வீசியதால் நேற்று முன்தினம் பெரும்பாலான வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஒரு சில வள்ளங்கள் மீன்பிடிக்க சென்றன. அவற்றில் போதிய மீன்கள் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால், நேற்றும் வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் 2-வது நாளாக குளச்சலில் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.

விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதம்

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகுகள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி இயக்கப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலையில் திடீரென கடல் நீர்மட்டம் தாழ்ந்தது. இதனால், காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. பின்னர், கடல் இயல்பு நிலைக்கு திரும்பியதும் 2 மணிநேரம் தாமதமாக 10 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. நேற்று முன்தினமும் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இதேபோல் வட்டக்கோட்டைக்கு செல்லும் படகும் நேற்று 2-வது நாளாக இயக்கப்படவில்லை.


Next Story