மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை
திருமுல்லைவாசலில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
சீர்காழி:-
திருமுல்லைவாசலில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
பரவலாக மழை
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சீர்காழி பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்கின. தற்போது மழை நின்றதால் வயல்களில் தேங்கி தண்ணீர் வடிந்து வருகிறது.
கடல் சீற்றம்
இந்த நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் கடந்த 2 நாட்களாக சீர்காழி அருகே திருமுல்லைவாசல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் கடற்கரையோர கிராமங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகத்தினர் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை
கடல் சீற்றம் காரணமாக திருமுல்லைவாசல், தொடுவாய் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று 2-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
மீன்பிடிக்க செல்லாததால் தங்களுடைய விசைப்படகு, பைபர் படகு, கட்டுமரம் ஆகியவற்றை திருமுல்லைவாசல் துறைமுகத்திலும், பக்கிம் கால்வாயிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை மீனவர்கள் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
போலீசார் எச்சரிக்கை
போலீஸ்துறை, வருவாய்த்துறை சார்பில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், கடலில் குளிக்ககூடாது எனவும் மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் திருமுல்லைவாசல் துறைமுகம் வெறிச்சோடி கிடந்தது.