கடல் சீற்றம் எதிரொலி: பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை


கடல் சீற்றம் எதிரொலி:    பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை
x

கடல் சீற்றம் காரணமாக பரங்கிப்பேட்டை பகுதி மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

கடலூர்

பரங்கிப்பேட்டை,

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்க கடலில் குறைந்த காற்றழுத்து தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கடலோர பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக காற்று வேகமாக வீசுவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடந்த 2 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

மீன்பிடிக்க செல்லவில்லை

இந்த நிலையில் நேற்றும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பரங்கிப்பேட்டை மற்றும் முடசல்ஒடை, அன்னங்கோவில், சாமியார்பேட்டை, சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம், குமாரபேட்டை, அன்னப்பன்பேட்டை, நஞ்சலிங்கம் பேட்டை, பெரியகுப்பம், முழுக்குதுறை, எம்.ஜி.ஆர்.திட்டு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் தங்களுடைய படகுகளை அந்தந்த பகுதியில் கடற்கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாத காரணத்தால், எப்போது பரபரப்பாக காணப்படும் அன்னங்கோவில், எம்.ஜி.ஆர். திட்டு, முடசல்ஓடை ஆகிய மீன் ஏலம் விடும் தளம் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story