மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை


மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
x

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மயிலாடுதுறை

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முக்கொம்பு மேலணையை அடைந்து அங்கிருந்து கல்லணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கல்லணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆறு கரையோர கிராமங்களான நாதல்படுகை, முதலை மேடு திட்டு, வெள்ளமணல் திட்டு, மேலவாடி, கோரை திட்டு, பாலுரான் படுகை போன்ற கிராமங்களில் 400-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

படகுகள் மூலம் மீட்பு

அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி கரையோரம் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். மேலும், படகுகள் மூலமும் மீட்கப்பட்டு வருகின்றனர். முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அரசு சார்பில் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மேற்கண்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட தோட்டப்பயிர், பருத்தி உள்ளிட்ட அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன. இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் மழையும் பெய்து வருவதால் இப்பகுதி மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ் முதலைமேடு, நாதல்படுகை ஆகிய கிராமங்களில் தங்கும் முகாம் அமைத்து கொடுத்துள்ளார்.

மீனவர்கள்கொள்ளிடம் ஆற்று தண்ணீர் கடலில் கடக்கும் இடமான பழையார் மீன்பிடி துறைமுகத்தில் தண்ணீர் அதிகமாக செல்வதால் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால், அவர்களும் வாழ்வாதாரம் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பழைய மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

இந்தநிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிப்பு அலுவலரும், குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனருமான அமுதவல்லி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரை பலப்படுத்தப்பட்டு வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட அவர் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் உள்ள முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமாக உள்ளதா? என்று ஆய்வு செய்தார்.

அவருடன் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் முருகண்ணன், மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், ஒன்றிய ஆணையர் ரெஜினா, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story