மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
பழையாறு மீனவர்கள்
கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தின் மூலம் 350 விசை படகுகள் 400 பைபர் படகுகள் மற்றும் 200 நாட்டு படகுகள் மூலம் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் தினமும் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். பழையாறு கிராமத்தில் உள்ள கோடீஸ்வரர் கோவில் குடமுழுக்கு காரணமாக பழையாறு மீனவர்கள் 5000 பேர் கிராம கட்டுப்பாட்டின் காரணமாக கடந்த 2-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இதைத் தொடர்ந்து வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதையொட்டி மீன்வளத் துறை உத்தரவினால் மீனவர்கள் மீண்டும் 8-ம் தேதி முதல் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வருகின்றனர். இதனால் பழையாறு துறைமுகத்தின் மூலம் கடலுக்குள் சென்று வரும் 5000 மீனவர்கள் நேற்று வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் இருந்து வருகின்றனர்.
வருமான இழப்பு
பழையாறு மீன்பிடி துறைமுக வளாகத்தில் மீன் வலை பின்னுதல், மீன்களை பதப்படுத்துதல், கருவாடு உலரவைத்தல், கருவாடு விற்பனை செய்தல், வெளியூர்களுக்கு வாகனங்களில் மீன்களை அனுப்பி வைத்தல், ஐஸ்கட்டி தயாரித்தல், உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவரும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்து வருகின்றனர். இதனால் மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் வருமானமின்றி தவிக்கிறார் கள்.