5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
வேதாரண்யத்தில் 2-வது நாளாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் 5 ஆயிரம் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
வேதாரண்யம்;
வேதாரண்யத்தில் 2-வது நாளாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் 5 ஆயிரம் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
கடல் சீற்றம்
நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், செருதூர், வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி, விழுந்தமாவடி, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை, கோடியக்காடு உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன.இதில் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று 2-வது நாளாக கடல் பலத்த சீற்றத்துடன் காட்சி அளித்தது.ஆழ்கடல் பகுதியில் இருந்து ராட்சத அலைகள் எழும்பி கரைப்பகுதியை பலமாக தாக்கியது. இதனால் படகை கடலுக்குள் இயக்கமுடியாமல் மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர். கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் அவர்கள் வருமான இழப்பால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
வெறிச்சோடின
வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், கோடியக்கரை, மனியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் வேதாரண்யம் கடற்கரை, மீன்இறங்குதளம் ஆகிய பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.