வீடுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் உண்ணாவிரதம்
சின்னமுட்டத்தில் பெட்ரோல் பங்க் அமைப்பதை எதிர்த்து மீனவர்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
சின்னமுட்டத்தில் பெட்ரோல் பங்க் அமைப்பதை எதிர்த்து மீனவர்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
பெட்ரோல் பங்க்
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கு மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் சின்னமுட்டம் துறைமுக வளாகத்தில் பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி தொடங்கியது. இதற்கு சின்னமுட்டம் பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் அமைக்க கூடாது என கடந்த 9-ந் தேதி முதல் சின்னமுட்டம் புனித தோமையார் ஆலயம் முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து பாதுகாப்புக்காக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மீனவர்களிடம் போலீசார் நடத்திய பலகட்ட பேச்சு வார்த்தையில் இதுவரை சமரசம் ஏற்படவில்லை.
உண்ணாவிரதம்
இதைத்தொடர்ந்து நேற்று சின்னமுட்டம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் புனித தோமையார் ஆலயம் முன்பு மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். மேலும் தங்களது வீடுகள், விசைப்படகுகள் மற்றும் தெருக்களில் கருப்புக்கொடி கட்டிருந்தனர்.
இதனால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சின்னமுட்டம் மீனவர்களுக்கு சொந்தமான 94 விசைப்படகுகள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.