3-வது வாரம் தர்ணாவில் ஈடுபட்ட மீனவர்கள்
ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை: 3-வது வாரம் தர்ணாவில் ஈடுபட்ட மீனவர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவர் காலனியில் 7 குடும்பத்தை சேர்ந்த 27 பேர் ஒரு மதத்திற்கு மாறியதாகவும், அதனால் மீனவ பஞ்சாயத்தார் தங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், இதுகுறித்து பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதையடுத்து மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் புகார் மனு அளித்தனர். இதனையடுத்து கலெக்டர் மகாபாரதி, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக வந்தவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் கிராம பஞ்சாயத்தார்கள் தங்களை ஊருக்குள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறி கடந்த வாரம் 10-ம் தேதியும் மனு அளித்தனர். இந்த நிலையில் நேற்றும் இதே கோரிக்கையை வலியுறுத்தி 3-வது வாரமாக கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று கலெக்டர் மகாபாரதி கூறிய நிலையில் அவர்கள் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கிற்கு எதிரே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்ஜீவ்குமார், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாலை இருதரப்பையம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறப்பட்டதையடுத்து காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.