சாலைைய சீரமைக்கக் கோரி மீனவர்கள் 'திடீர்' மறியல்


சாலைைய சீரமைக்கக் கோரி மீனவர்கள் திடீர் மறியல்
x

கருங்கல் அருகே சாலையை சீரமைக்கக் கோரி மீனவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 4 அரசு பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டது.

கன்னியாகுமரி

கருங்கல்:

கருங்கல் அருகே சாலையை சீரமைக்கக் கோரி மீனவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 4 அரசு பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டது.

சேதமடைந்த சாலை

கருங்கல் அருகே உள்ள உதயமார்த்தாண்டம் சந்திப்பில் இருந்து கைதவிளாகம், மேல்மிடாலம் வழியாக ஒரு சாலை செல்கிறது. இந்த சாலையை குறும்பனை, மிடாலம், மேல்மிடாலம், ஹெலன் நகர், இனயம், புத்தன்துறை, ராமன்துறை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது இந்த சாலை பொதுமக்களால் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. எனவே, இதை சீரமைக்க வேண்டுமென இந்த பகுதி மீனவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதைதொடர்ந்து சாலையை சீரமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. மேலும் சாலையை சீரமைக்கும் பணியை சில மாதங்கள் முன் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். வேலை தொடங்கிய சில நாட்களில் பணி கிடப்பில் போடப்பட்டது. அதன்பின்பு மீனவர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் சாலை பணி தொடங்கவில்லை.

மறியல்

இதனால் ஆத்திரமடைந்த கடற்கரை கிராமத்தை ேசர்ந்த மீனவர்கள் ஏராளமானோர் நேற்று காலையில் மேல்மிடாலம் சந்திப்பில் திரண்டனர். அவர்கள் சாலையை சீரமைக்கக்கோரி 'திடீர்' மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 4 அரசு பஸ்கள் சிறைப்பிடிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் அருட்பணியாளர்கள் ஹென்றி பிலிப், ஆன்றனி கிளாரட், ஜினிஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தகவல் அறிந்த கிள்ளியூர் தாசில்தார் ராஜேஷ், கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சு வார்த்தையில் முடிவு ஏற்படவில்லை.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஹெலன் ஜெனட், செப்டம்பர் மாத இறுதிக்குள் சாலைப்பணி முடித்து தருவதாக எழுத்துபூர்வமாக உறுதி அளித்தார். இதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story