கூடுதாழையில் மீனவர்கள் கஞ்சி காய்ச்சி போராட்டம்
தூண்டில் வளைவு அமைக்கக்கோரி கூடுதாழையில் மீனவர்கள் கஞ்சி காய்ச்சி குடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திசையன்விளை:
தூண்டில் வளைவு அமைக்கக்கோரி கூடுதாழையில் மீனவர்கள் கஞ்சி காய்ச்சி குடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர் போராட்டம்
நெல்லை மாவட்டம் உவரி அருகே கூடுதாழை மீனவ கிராமத்தில் கடந்த 10-ந் தேதி திடீரென கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் 30 மீட்டர் தூரம் வரை கடல்நீர் ஊருக்குள் புகுந்ததுடன் அங்கு நின்ற மின்கம்பமும் சாய்ந்தது. இதன் காரணமாக கடற்கரையில் சுமார் 10 அடிக்கு மேல் பள்ளம் உருவாகி, படகுகளை நிறுத்த முடியாத நிலையும் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு தூண்டில் வளைவு அமைக்கக்கோரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கடந்த 11-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டம், மனிதசங்கிலி, படகுகள் மீது கருப்பு கொடி ஏற்றுவது என பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்
பெண் மயங்கி விழுந்தார்
இந்த போராட்டம் நேற்று 5-வது நாளாக நீடித்தது. காலையில் பெண்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேனர்களை ஏந்தியபடி கருப்பு கொடியுடன் ஊர்வலமாக கடற்கரைக்கு சென்றனர்.
அப்போது, ஒரு ெபண் திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உவரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கஞ்சி காய்த்து குடித்தனர்
பின்னர் கடற்கரையில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பெரிய அண்டாவில் கஞ்சி காய்ச்சி குடித்தனர். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள பந்தலில் ஆர்ப்பாட்டமும் நடந்தது. இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.