கோட்டக்குப்பம் அருகேமீனவ கிராம மக்கள் சாலைமறியல்பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


கோட்டக்குப்பம் அருகேமீனவ கிராம மக்கள் சாலைமறியல்பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 July 2023 12:15 AM IST (Updated: 2 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் மீனவ கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். பெண்கள் தீக் குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்


கோட்டக்குப்பம்,

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட தந்திராயன் குப்பத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் மீன் பிடித்து வந்தவுடன் தங்களது படகுகளை கிராமத்தின் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைப்பது வழக்கம்.

இந்த நிலையில் பக்கத்து கிராமமான சின்ன முதலியார்சாவடி மீனவர்களும், அவர்களது படகுகளை தந்திராயன்குப்பம் கடற்கரை பகுதியில் நிறுத்தி வருகின்றனர். இதனால் தந்திராயன் குப்பம் மீனவர்களுக்கு படகுகளை நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லாமல் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால், மீன் பிடிக்க படகுகளை ஓட்டிச்செல்வதில் இடையூறு ஏற்பட்டது. அத்துடன் சின்னமுதலியார்சாவடி மீனவர்கள் தங்களது படகுகளை அவர்களது ஊர் கடற்கரையிலேயே நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

சாலைமறியல்

மேலும் சமாதான கூட்டம் நடத்தியும் அதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும் தந்திராயன்குப்பம் மீனவர்கள் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் முதலியார்சாவடி மீனவர்கள் தங்களது கிராமத்தின் கடற்கரையில் படகுகளை நிறுத்துவதை கண்டித்து நேற்று காலை தந்திராயன்குப்பம் மீனவர்கள் புதுச்சேரி-மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கோட்டக்குப்பம் காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் மற்றும் இன்ஸ்பெக்டர் ராபின்சன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

பெண்கள் தீக்குளிக்க முயற்சி

அப்போது 2 மீனவ பெண்கள் உள்பட 3 பேர் திடீரென்று தங்களது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதைப்பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களிடம் இருந்து பெட்ரோல் கேன்களை பிடுங்கிக் தடுத்து காப்பாற்றினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு மீனவர்கள் கலைந்து சென்றனர். சாலைமறியல் போராட்டம் காரணமாக, புதுச்சேரி-மரக்காணம் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story