இலவச வீடு கட்டி தரக்கோரி மனு கொடுக்க வந்த மீனவ பெண்கள்
அரசு இலவசமாக வீடு கட்டித்தர வலியுறுத்தி ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவ பெண்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
அரசு இலவசமாக வீடு கட்டித்தர வலியுறுத்தி ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவ பெண்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்து சென்றனர்.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீனவர் காலனியில் வசித்து வரும் சுமார் 50-க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் தங்களுக்கு அரசு இலவசமாக வீடு கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவை எழுதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒன்று சேர்ந்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு சென்று தங்கள் கோரிக்கை மனுவை கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர்.
வீடு கட்டி தரக்கோரி மனு
இது குறித்து அந்த பெண்கள் கூறும் போது. பல ஆண்டுகளாக வாடகை வீட்டிலேயே வசித்து வருவதாகவும் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருவதால் போதிய வருமானம் இன்றி தவித்து வருவதாகவும் அதனால் அரசு இலவசமாக வீடு கட்டி தர வேண்டும் என்று கோரி கலெக்டரிடம் மனு கொடுத்ததாக தெரிவித்தனர்.