மீனவர்கள் உயிர்பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
ஆழ்கடலில் படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் வணிக கப்பல்களில் உள்ளது போன்ற உயிர் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என்று பயிற்சி முகாமில் அறிவுறுத்தப்பட்டது.
ஆழ்கடலில் படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் வணிக கப்பல்களில் உள்ளது போன்ற உயிர் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என்று பயிற்சி முகாமில் அறிவுறுத்தப்பட்டது.
பயிற்சி முகாம்
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கான மீன்பிடிப்படகு என்ஜின் பராமரிப்பு மற்றும் கடலில் மீனவர்களின் பாதுகாப்பு குறித்த ஒரு வாரகால பயிற்சி முகாம் நடக்கிறது. பயிற்சி தொடக்க விழாவுக்கு மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் ப.அகிலன் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் ச.மாரியப்பன் வரவேற்று பேசினார். தூத்துக்குடி மத்திய கடல்சார் பயிற்சி நிலையத்தின் முதல்வர் கேப்டன் கே.எஸ்.பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
உயிர்பாதுகாப்பு உபகரணங்கள்
அப்போது அவர் பேசுகையில், மீனவர்கள் வணிக கப்பல்களில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு அம்சங்களை தங்களின் ஆழ்கடல் படகுகளில் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் தற்போதைய ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள், வணிகக்கப்பல்கள் பயணிக்கும் அளவுக்கு கடலில் தொலைதூரம் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்த மீனவர்கள் உயிர்பாதுகாப்பு உபகரணங்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். கடலில் இருக்கும்போது படகு என்ஜினில் பழுது ஏற்பட்டால் மீனவர்களே பழுது நீக்குவதற்கு இந்த பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும் என்று கூறினார்.
இந்த பயிற்சியில் கடல்சார் மின்னணு சாதனங்களை கையாளுதல், கடலில் முதலுதவி மற்றும் கடலில் மீனவர் பாதுகாப்பு, கடல் வானிலை, மாலுமிக்கலை வரைபடங்கள், ஆயிரங்கால் தூண்டில் வடிவமைப்பு, மாலுமிக்கலை ஒலிச் சமிக்கைகள் மற்றும் கடற்பயண விதிகள், தீயணைப்பு முறைகள் மற்றும் செயல்விளக்கம், மீன்பிடிப் படகுகளில் மீன்களை கையாளுதல் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
கலந்துகொண்டவர்கள்
பயிற்சியில் மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் நீ.நீதிச்செல்வன், கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் விர்ஜில் கிராஸ், பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் ந.வ.சுஜாத்குமார், கன்னியாகுமரி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் உதவி இயக்குநர் எஸ்.பி.லட்சுமிகாந்தன், தூத்துக்குடி மீன்வள மாலுமிக்கலைத் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் செ.விசுவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். பயிற்சியில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் த.ரவிக்குமார் நன்றி கூறினார்.