முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்
அதிராம்பட்டினம் அருகே முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிராம்பட்டினம் அருகே முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழத்தோட்டம்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்கு 250 நாட்டுப்படகுகள் உள்ளன. இதன் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.
அக்னியாற்றில் இருந்து வரும் காட்டாற்று நீா் கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் 20 அடி உயரம், 500 மீட்டா் நீளம், 200 மீட்டா் அகலம் கொண்ட மணல் திட்டு ஏற்பட்டது.
ஆற்று வெள்ளம் கலப்பதில் தடை
இதனால் மீனவா்கள் படகுகளை கடலுக்குள் கொண்டு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனா். மேலும், மழைக்காலங்களில் காட்டாற்றில் வெள்ளம் அதிகரிக்கும்போது, மணல் திட்டு காரணமாக ஆற்று வெள்ளம் கடலில் கலப்பது தடைபட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்று வெள்ளம் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தெருக்களில் ஆங்காங்கே தேங்கி நின்று பாதிக்கப்படுகிறது.
எனவே துறைமுக வாய்க்காலை தூா்வாரி, மணல் திட்டை முழுமையாக அகற்ற வேண்டும் என மீனவா்கள் வலியுறுத்தி வந்தனர்.
ரூ.8 கோடியில் பணி
இதையடுத்து தமிழக அரசின் மூலம் ரூ.8 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் மற்றும் கடற்கரைக்குள் நீர்புகும் வாய்க்காலின் முகத்துவாரங்களை அடைத்து கிடக்கும் மணலை தூர்வாரும் பணி நடந்தது.
இதில் படகு இறங்குதளம் மற்றும் சில கட்டிடங்கள் மட்டும் கட்டப்பட்டது. முகத்துவாரங்களில் மணல் திட்டுக்கள் முழுமையாக தூர்வாரப்படவில்லை. இதுபற்றி கேட்டபோது ஒதுக்கப்பட்ட நிதிக்கான வேலை முடிந்துவிட்டது என்றும் கூறப்பட்டதாக அந்த பகுதி கிராம மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
கடலில் இறங்கி போராட்டம்
கடற்கரையில் இருந்து இந்த கீழதோட்டம் கிராமத்திற்குள் 250 படகுகளும் வந்து போவதற்கான ஒரே வழி இந்த முகத்துவாரத்தில் உள்ள வாய்க்கால்கள் மட்டுமே. எனவே முகத்துவாரத்தை தூர்வாரி மணல் திட்டுகளை அகற்றுவதற்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கின.
ஆனால் முகத்துவார மணல் திட்டுகளை அப்புறப்படுத்தாதது குறித்து ஊர் பஞ்சாயத்தார்கள் மீன்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர். ஆனாலும் எந்த பயனும் இல்லை. மணல் திட்டுகளை அப்புறப்படுத்தாததால், 250 நாட்டுப் படகுகளும் கிராமத்திற்குள் வந்து போக முடியவில்லை. இதனால் தொழில் முடங்கி இருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் முகத்துவாரத்தில் மணல் திட்டுகளை அகற்றக்கோரி நேற்று அந்த கிராமத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் இறங்கி மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிராம்பட்டினம் அருகே முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழ்த்தட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்து தமிழக அரசு அறிவித்த இந்த திட்ட பணிகளை ஆய்வு செய்யாமல் விட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்வளத்துறை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் இதற்கு தீர்வு காண வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கோஷம் எழுப்பினர். இந்த போராட்டம் ஒரு மணி நேரம் நீடித்தது. மீனவர்கள் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.