இந்திய கடற்படையால் தாக்கப்பட்ட மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்


இந்திய கடற்படையால் தாக்கப்பட்ட மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர்
x
தினத்தந்தி 30 Oct 2022 12:45 AM IST (Updated: 30 Oct 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

இந்திய கடற்படையால் தாக்கப்பட்ட மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர். அவர்களை கலெக்டர் லலிதா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மயிலாடுதுறை

இந்திய கடற்படையால் தாக்கப்பட்ட மீனவர்கள் சொந்த ஊர் திரும்பினர். அவர்களை கலெக்டர் லலிதா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மீனவர்கள் மீது தாக்குதல்

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள வானகிரி மீனவ கிராமத்தை சேர்ந்த வீரவேல், சுரேஷ், மோகன்ராஜ், செல்லதுரை, செல்வகுமார் உள்ளிட்ட மீனவர்கள் கடந்த 21-ந் தேதி ராமேசுவரம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இந்திய கடற்படையால் தாக்கப்பட்டு காயம் அடைந்தனர். இதில் மீனவர் வீரவேல் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதனை அடுத்து இந்திய கடற்படையினர் அவரை மீட்டு ஹெலிகாப்டர் மூலம் மதுரை கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சொந்த ஊர் திரும்பினர்

மீதமுள்ள மீனவர்கள் சுரேஷ், மோகன்ராஜ், செல்லதுரை, செல்வகுமார் ஆகியோர் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு தங்களுடைய சொந்த ஊரான வானகிரிக்கு வந்தனர்.

ஆறுதல்

இதனை அறிந்த மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா நேற்று அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து கிராம பொறுப்பாளர்கள் தங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகள் வேண்டி கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் கலெக்டர் வானகிரியில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். மேலும் அரசினர் உயர்நிலைப்பள்ளியை பார்வையிட்ட அவர் அங்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் சுனாமியின் போது பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட வீடுகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். அப்போது நிவேதா முருகன் எம்.எல்.ஏ., மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், தாசில்தார் செந்தில்குமார், சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பஞ்சுகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

அ.தி.மு.க.வினர் ஆறுதல்

இந்திய கடற்படையினர் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த வானகிரி மீனவர்களை நேற்று மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பவுன்ராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தனது சொந்த பணத்தில் இருந்து நிதி உதவி வழங்கினார். அப்போது அவர் விரைவில் அ.தி.மு.க. சார்பில் உரிய நிவாரணத்தொகை வழங்கப்படும் என தெரிவித்தார். அவருடன் சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட மீனவர் அணி செயலாளர் நாகரத்தினம், ஒன்றிய துணை செயலாளர் பத்மாவதி ராஜா உள்ளிட்ட அ.தி.மு.க.வினரும் ஆறுதல் கூறினர்.


Next Story