மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படுமா?


மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படுமா?
x

டீசல் விலை உயர்வால் மீன்பிடி தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வரும் நிலையில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படுமா? என மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தஞ்சாவூர்

டீசல் விலை உயர்வால் மீன்பிடி தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வரும் நிலையில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படுமா? என மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மீன்பிடி தடைக்காலம்

மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.

மீன் இனப்பெருக்கத்திற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கிழக்கு கடற்கரை பகுதியில் அரசு விசைப்படகுகளுக்கு (இழுவலை) தடைவிதித்து நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கடல் வளம் தற்போது இல்லை. அன்று இருந்தது போல படகுகள் எண்ணிக்கையும் இன்று இல்லை.

தொழில் நஷ்டம்

தடைக்காலம் முடிந்து மீண்டும் கடலுக்கு சென்றால் ஒரு வார காலம் மட்டும் மீனவர்கள் வலையில் அதிக அளவு மீன்கள் கிடைக்கின்றன. அதன்பிறகு தொழில் நஷ்டம் தான் ஏற்பட்டு வருகிறது. அதுவும் டீசல் விலை உயர்வால் மீன்பிடி ெதாழிலில் மீனவர்கள் தொடர்ந்து பெரும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் நிலை அறிந்து மீனவர்களுக்கு வழங்கும் டீசலுக்கு முழு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

அன்னிய செலாவணி

கடல் பொருள் ஏற்றுமதி மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியாக அரசுக்கு மீனவர்கள் பெற்றுக்கொடுத்து வருகிறார்கள். அத்தகை மீனவர்களுக்கு தொழில் நஷ்டம் ஏற்படும் நிலை தான் உள்ளது. தற்போது மீனவர்கள் டீசல் விலை ஏற்றத்தால் அழிவின் விளிம்பில் நிற்கிறார்கள்.

தடைகாலம் கோடைகாலத்தில் வருவதால் படகுகள் அதிகளவில் சேதம் அடைகிறது. படகுகளை பராமரித்து மீண்டும் தொழிலுக்கு எடுக்கும்போது படகு ஒன்றிற்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது என மீனவர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ் மாநில மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜுதீன் கூறியதாவது:-

நிவாரண நிதி போதுமானதாக இல்லை

மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்து சிரமப்படுகிறார்கள். 2 மாத காலத்திற்கு வேலையின்றி பசி, பட்டினிக்கு ஆளாகி வருகிறார்கள். மீனவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படுகிற ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி போதுமானதாக இல்லை. எனவே தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப மேற்கண்ட நிவாரண தொகையை கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் படகு பராமரிப்பு செலவுக்காக வட்டியில்லாத கடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் எளிய தவணை முறையில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பாதுகாக்க வேண்டும்

தடைக்காலத்தை நவம்பர் முதல் டிசம்பர் வரை உள்ள மாதத்தில் நடைமுறைபடுத்தினால் இயற்கை சீற்றத்திலிருந்து மீனவர்களையும், படகுகளையும் பாதுகாக்கலாம். அத்துடன் கயிறு, வலை போன்றவற்றை கூட்டுறவு சங்கம் மூலம் மானிய விலையில் வழங்க வேண்டும். மீனவர்களின் நஷ்டத்தை தவிர்க்கும் விதமாக மீனவர்கள் பிடித்து வரும் இறால்களுக்காக குளிர்பதன கிடங்குகள் ஏற்படுத்தி தந்தால் மீன்களுக்கு நல்ல விலைகிடைத்து நஷ்டத்தில் இருந்து மீளமுடியும்.

இவற்றையெல்லாம் பரிசீலனை செய்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பி உள்ளோம்.

மராமத்துக்கு நிதி உதவி

தஞ்சை மாவட்டம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் ராஜமாணிக்கம்:-

டீசல் விலை ஏற்றத்தால் மீன்பிடி தொழில் கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து வருகிறது. அத்துடன் மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலத்தில் வருகிறது. கடும் வெயிலில் 61 நாட்களுக்கு ஒரே இடத்தில் படகுகளை நிறுத்தி வைப்பதால் சேதம் ஏற்படுிறது. மீண்டும் தொழிலுக்கு செல்லும்போது படகு ஒன்றிற்கு லட்சக்கணக்கில் செலவு செய்யவேண்டி உள்ளது. அரசு தடைக்கால நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்குகிறது. இதை உயர்த்தி வழங்குவதோடு படகு மராமத்து செய்ய அரசு நிதி உதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story