தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பட்டியலில் கரும்பு இல்லை:மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் ஏமாற்றம்


தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பட்டியலில் கரும்பு இல்லை:மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 26 Dec 2022 12:45 AM IST (Updated: 26 Dec 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பட்டியலில் கரும்பு இல்லாத நிலையில் மயிலாடுதுறை மாவட்ட கரும்பு விவசாயிகள்ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்கள் போதிய விலை கிடைக்குமா? என எதிர்பார்க்கிறார்கள்.

மயிலாடுதுறை

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பட்டியலில் கரும்பு இல்லாத நிலையில் மயிலாடுதுறை மாவட்ட கரும்பு விவசாயிகள்ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்கள் போதிய விலை கிடைக்குமா? என எதிர்பார்க்கிறார்கள்.

பொங்கல் பண்டிகை

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளில் ஒவ்வொரு குடும்பத்தினரும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு மிக முக்கியமாக விளங்குவது செங்கரும்புகள் என்றால் அது மிகை ஆகாது.

பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கரும்புகள் தமிழகம் முழுவதும் பல இடங்களில் பயிரிடப்பட்டாலும், சீர்காழி பகுதியில் விளையும் செங்கரும்புகள் தனி சுவை கொண்டதாக விளங்குகிறது.

வியாபாரிகள் ஆர்வம்

அதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆண்டுதோறும் சீர்காழி பகுதியில் பயிரிடப்பட்ட கரும்புகளை வாங்க ஆர்வம் காட்டுவார்கள். இதுகுறித்து விவசாயி பண்டரிநாதன் கூறுகையில், 'செங்கரும்புகள் 10 மாதங்களில் அறுவடைக்கு தயாராக உள்ள பயிராகும். ஒரு செங்கரும்பை பயிரிட கிட்டத்தட்ட 25 ரூபாய் செலவாகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு ரேஷன் கார்டுகளுக்கு கரும்புகள் வழங்கியது. இதன் காரணமாக கரும்பு உற்பத்தியாளர்களிடம் இருந்து செங்கரும்புகளை கொள்முதல் செய்தனர்.

கரும்புகள் இல்லை

கிட்டத்தட்ட 20 ரூபாய் அளவிற்கு கரும்பு ஒன்றுக்கு விலை கிடைத்ததால், விவசாயிகள் இந்த ஆண்டும் கரும்பு ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் அதிக அளவில் பயிரிட்டிருந்தனர்.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு ரூபாய் ஆயிரத்துடன், பொங்கல் பரிசு தொகுப்பாக சர்க்கரை மற்றும் அரிசி வழங்கப்படும் என அறிவித்தது. இந்த பரிசு தொகுப்பு பட்டியலில் செங் கரும்புகள் சேர்க்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நஷ்டம் ஏற்படும் சூழல்

கடந்த சில ஆண்டுகளாக பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கரும்புகளை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் விளைந்த கரும்புகள் விற்பனை ஆகாத சூழல் உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசும் கரும்பு கொள்முதல் செய்யாததால், விவசாயிகள் பெருத்த நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் பெய்த கனமழையால் சீர்காழி பகுதியில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில் தற்போது கரும்பு விவசாயிகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே தமிழக முதல்-அமைச்சர் விவசாயிகளின் நலன் கருதி செங்கரும்புகளை பொங்கல் பண்டிகைக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


Next Story