பாரூர் பெரிய ஏரியில்மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு
காவேரிப்பட்டணம்
பாரூர் பெரிய ஏரியில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செத்து மிதந்த மீன்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பாரூர் பெரிய ஏரி 600 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் கட்லா, ரோகு, சப்பாரை, விரால் உள்ளிட்ட மீன் வகைகள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் கீழ்குப்பத்தில் இருந்து ஆமணக்கம்பட்டி செல்லும் சாலையில் ஏரிக்கரை ஓரங்களில் 10 டன்னுக்கும் மேலாக மீன்கள் செத்து மிதந்தன.
இதனால் அங்கு துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். மேலும் செத்து மிதக்கும் மீன்களை பறவைகள் கொத்தி சென்று அருகில் உள்ள வீடுகளின் கூரைகள், மொட்டை மாடி, தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்டவற்றில் போடுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
இதனால் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும். இப்பகுதியில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீன்கள் செத்ததற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.