பாப்பிரெட்டிப்பட்டி அருகே பண்ணை குட்டையில் வளர்க்கப்பட்ட ஒரு டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் அழிப்பு
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பண்ணை குட்டையில் வளர்க்கப்பட்ட ஒரு டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்
ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் சுகாதாரமற்ற தண்ணீரிலும் வளரும் தன்மை கொண்டது. குறைந்த நாட்களிலேயே விரைவாக வளர்ந்து விடும். இவை மனிதர்களுக்கு மட்டுமல்லாது, நீர்வாழ் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிப்பவையாகும். மேலும் தன்னுடன் வாழும் பிற மீன் வகைகளை ஒட்டு மொத்தமாக அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்க்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. ஆனால் இந்த தடை உத்தரவை மீறி தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பண்ணை குட்டைகள் அமைத்து, ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவை பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றை தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.
ரகசிய தகவல்
இந்தநிலையில் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள நத்தமேடு பகுதியில் பண்ணை குட்டை ஒன்றில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்க்கப்படுவதாக மீன்வளத்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா, மீன் வளர்ப்பு துறை ஆய்வாளர் சங்கர் தலைமையில் மோட்டாங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் கற்பகம், பொம்மிடி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினம் ஆகியோர் நத்தமேடு கிராமத்திற்கு சென்றனர்.
அங்கு கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மீன் பண்ணை குட்டையை ஆய்வு செய்தனர். அப்போது அதில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்க்கப்படுவது தெரியவந்தது.
அழிப்பு
இதையடுத்து பண்ணை குட்டையில் இருந்த தண்ணீர் முழுவதும் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது. பின்னர் அதில் இருந்த ஒரு டன் அளவிலான ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அருகில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி, மீன்கள் அதில் போடப்பட்டு அழிக்கப்பட்டன.
மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட மருந்துகளும் தெளிக்கப்பட்டன. அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.