இரையுமன்துறை கடற்கரையில் மீன்பிடி படகு தீயில் எரிந்து நாசம் போலீசார் விசாரணை
இரையுமன்துறை கடற்கரையில் மீன்பிடி படகு தீயில் எரிந்து நாசமானது.
கொல்லங்கோடு:
சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜெபர்சன், மீனவர். இவர்தனக்கு சொந்தமான பைபர் படகை இரையுமன்துறை கடற்கரை பகுதியில் மேடான பகுதியில் நிறுத்தி வைத்திருந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் ஜெபர்சனின் படகு திடீரென தீப்பற்றி எரிந்தது. படகில் எரிந்த தீ பக்கத்தில் இருந்த தோட்டத்து புல்வெளிக்கும் பரவியதால் அந்த பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் கொல்லங்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை அணைப்பதில் வீரர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதனால் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் படகு முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து ஜெபர்சன் நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் எரிவதற்கான காரணம் என்ன? யாராவது தீ வைத்து எரித்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.