சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா: கண்மாயில் இறங்கி மீன்களை அள்ளிய கிராம மக்கள்


சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா: கண்மாயில் இறங்கி மீன்களை அள்ளிய கிராம மக்கள்
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் கண்மாயில் இறங்கி மீன்களை கிராம மக்கள் அள்ளினர்

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் கண்மாயில் இறங்கி மீன்களை கிராம மக்கள் அள்ளினர்.

மீன்பிடி திருவிழா

சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணமங்கலபட்டி ஊராட்சியில் காப்பாரபட்டி கிராமத்தில் காப்பார கண்மாய் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

இந்த கண்மாய் நீரை கொண்டு அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனா்.

தற்போது நெல் அறுவடை நடைபெற்ற நிலையில் கண்மாயில் உள்ள தண்ணீர் வற்றியது.

இதை தொடர்ந்து கிராமத்தார் ஒன்றிணைந்து காப்பாரபட்டி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்தனர். இதன்படி நேற்று காலை காப்பாரபட்டி கிராம முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் கண்மாய் கரையில் நின்று பச்சைக் கொடி காட்டி மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

பலவகை மீன்கள் சிக்கின

இதில் சுற்றுவட்டாரத்தை சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் கண்மாயில் இறங்கி வலைகளை கொண்டு மீன்பிடிக்க தொடங்கினர். இதில் கட்லா, லோகு, ஜிலேபி, கெளுத்தி, அயிரை உள்ளிட்ட பல வகை மீன்கள் சிக்கின. சிலரது வலைகளில் பாம்புகளும் சிக்கின.

இதில் கலந்து கொண்ட அனைவருக்குமே குறிப்பிட்ட அளவு மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனா். இந்த பகுதியில் ஆண்டின் முதல் மீன்பிடித் திருவிழா என்பதால் பல ஊர்களில் இருந்து வந்திருந்த மக்கள் கண்மாயில் இறங்கி மீன்களை அள்ளிய மகிழ்ச்சியில் வீடு திரும்பினர். இதைத்தொடா்ந்து இந்தப் பகுதியில் உள்ள கிராமத்தினரின் வீடுகளில் மீன் குழம்பு வாசனை கமகமத்தது. இதுபோன்ற மீன்பிடித் திருவிழா நடத்தப்படுவதால் வருங்காலங்களில் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தேவையான மழை பெய்து விவசாயம் பெருகும் என்பது அப்பகுதி விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது.


Next Story