20 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற மீன்பிடி திருவிழா


தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே 20 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்துகொண்டு கொட்டும் மழையிலும் மீன்களை போட்டி போட்டு அள்ளி சென்றனர்.

சிவகங்கை

மானாமதுரை

மானாமதுரை அருகே 20 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்துகொண்டு கொட்டும் மழையிலும் மீன்களை போட்டி போட்டு அள்ளி சென்றனர்.

மீன்பிடி திருவிழா

சிங்கம்புணரி, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களில் தற்போது தண்ணீர் வற்றி வரும் நிலையில் மீன்பிடி திருவிழா களைக்கட்ட தொடங்கியது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் கண்மாயில் மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் மானாமதுரை அருகே உள்ள நத்தபுரக்கி கிராமத்தில் உள்ள கண்மாயில் நேற்று மீன்பிடி திருவிழா நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான கிராம மக்கள் காலை முதல் அங்கு குவிய தொடங்கினர்.

நேற்று மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்ததால் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்க வந்த கிராம மக்களும் மழையை பொருட்படுத்தாமல் கொட்டும் மழையிலும் வந்து காத்திருந்தனர்.

20 ஆண்டுகளுக்கு பின்னர்

அதன்பின்னர் கண்மாய் அருகே உள்ள தர்ம முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கிராம முக்கியஸ்தர் கொடியை அசைத்தவுடன் அங்கு காத்திருந்த கிராம மக்கள் வேகமாக ஓடி சென்று கண்மாயில் இறங்கி ஊத்தா வலை, கூடை, கொசு வலை, சளிக்கி உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை கொண்டு மீன்களை பிடித்தனர்.

இதில் கட்லா, கெண்டை, கெளுத்தி, விரால் உள்ளிட்ட மீன்களை தலா ஒரு கிலோ முதல் 2 கிலோ வரை பிடித்து சென்றனர். ஏற்கனவே இந்த கண்மாயில் கடந்த 2003-ம் ஆண்டு மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது. தற்போது 20 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டதால் ஏராளமானோர் கலந்துகொண்டு மீன்களை போட்டி போட்டு அள்ளி சென்று வீடுகளில் சமைத்து ருசித்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மீன் வாசம் கமகமத்தது.


Next Story