சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா


சிங்கம்புணரி அருகே மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அருகே ஆறுகுடிபட்டி ஏந்தல் கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு மீன்களை அள்ளி சென்றனர்.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே ஆறுகுடிபட்டி ஏந்தல் கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு மீன்களை அள்ளி சென்றனர்.

மீன்பிடி திருவிழா

சிங்கம்புணரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. இங்கு ஏராளமான விவசாயிகள் மழைநீரை நம்பியே விவசாய பணிகளை செய்து வருகின்றனர். இங்குள்ள கண்மாய் தண்ணீரை கொண்டு பல ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகிறது. அதன் அடிப்படையில் கோழிக்குட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆறுகுடிபட்டியில் உள்ள ஏந்தல் கண்மாய் சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 150-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த கண்மாய் மூலம் பயன்பெறுகிறது.

இந்நிலையில் விவசாய பணிகள் முடிவுற்று அறுவடைகள் நடைபெற்று வரும் நிலையில் கண்மாயில் உள்ள தண்ணீரின் அளவு குறைய தொடங்கி வருகிறது. இதையடுத்து கிராமத்தார்கள் ஒன்றிணைந்து மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்தனர்.

மீன்களை அள்ளி சென்றனர்

நேற்று காலை ஆறுகுடிபட்டி கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து கண்மாய் கரையில் நின்று பச்சை கொடி காட்டினர். பின்னர் 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மீன்களை பிடிக்க தொடங்கினர். முறையூர், சூரக்குடி, முத்துச்சாமிபட்டி, சியாமுத்துபட்டி, எஸ்.எஸ்.கோட்டை, செவல்பட்டி, கோவில்பட்டி, பிள்ளையார் ஊரணிபட்டி, சூடாணிபட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கண்மாயில் இறங்கி வலைகளை பயன்படுத்தி போட்டி போட்டு மீன்பிடித்தனர்.

இதில் கட்லா, லோகு, சிசி, ஜிலேபி, கெளுத்தி, அயிரை உள்ளிட்ட மீன் வகைகள் அதிக அளவில் சிக்கின. மீனவர்கள் வலையில் குறவை மீன்கள் குறிப்பிட்ட அளவு சிக்கிய நிலையில் ஒருசிலர் வலைகளில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளும் சிக்கின.

மீன்குழம்பு வாசனை

மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மீன்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதுபோன்ற மீன்பிடி திருவிழா நடத்தப்படுவதால் வருங்காலங்களில் விவசாயம், குடிநீருக்கு தேவையான அளவு மழைபெய்து செழிக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.

மீன்பிடி திருவிழாவில் பிடித்த மீன்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று அனைவரும் சமைத்து சாப்பிட்டனர். இதனால் அப்பகுதியே மீன்குழம்பு வாசனையால் கமகமத்தது.


Next Story