மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா


மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா
x

கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையில் நடந்த மீன்பிடி திருவிழாவில் 5 ஆயிரம் கிலோ மீன்கள் சிக்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் மணிமுக்தா அணை உள்ளது. இந்த அணையில் மீன்பிடிக்க பொதுப்பணித்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நபரிடம் குத்தகைக்கு விட்டனர். இதையடுத்து குத்தகைக்கு எடுத்தவர்கள் மணிமுக்தா அணையில் மீன்களை வளர்த்து பிடித்தனர். இந்த நிலையில் குத்தகை காலம் முடிவடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா நேற்று நடைபெற்றது.

இதில் அகரக்கோட்டாலம், அணைக்கரைக்கோட்டாலம், வாணியந்தல், பெருவங்கூர், சிறுவங்கூர், தண்டலை, சூளாங்குறிச்சி, பள்ளிப்பட்டு ரங்கநாதபுரம், அரியபெருமானூர், ஆலத்தூர், ரோடுமாமந்தூர், நத்தமேடு, மோ.வன்னஞ்சூர், சோமண்டார்குடி, ஆலத்தூர், அருபெருமானூர், பரமநத்தம், புத்தந்தூர், பிச்சநத்தம், மூரார்பாளையம், எஸ்.வி.பாளையம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் அணைக்குள் ஆர்வத்துடன் இறங்கி போட்டி போட்டு வலை மற்றும் கைகளால் மீன்பிடித்தனர்.

5 ஆயிரம் கிலோ

இதில் ஒவ்வொருவரும் 5 கிலோ முதல் 20 கிலோ வரை கண்ணாடி, ரோகு, விரால் உள்ளிட்ட மீன்களை பிடித்துக்கொண்டு சென்றனர். இந்த மீன்பிடி திருவிழாவில் சுமார் 5 ஆயிரம் கிலோ மீன்கள் சிக்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story