மீன்பிடி திருவிழா; ஆர்வமுடன் பங்கேற்ற கிராம மக்கள்


மீன்பிடி திருவிழா; ஆர்வமுடன் பங்கேற்ற கிராம மக்கள்
x

தா.பேட்டை, மணப்பாறையில் நடந்த மீன்பிடி திருவிழாவில் கிராம மக்கள் பங்கேற்று ஆர்வமாக மீன்களை பிடித்தனர்.

திருச்சி

தா.பேட்டை, மணப்பாறையில் நடந்த மீன்பிடி திருவிழாவில் கிராம மக்கள் பங்கேற்று ஆர்வமாக மீன்களை பிடித்தனர்.

மீன்பிடி திருவிழா

முசிறி தாலுகா தா.பேட்டை அருகே திருத்தலையூர் ஏரியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. திருத்தலையூர் ஏரியானது சுமார் 120 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியின் நீர்ப்பாசனத்தை நம்பி சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் பெய்த மழை காரணமாக இந்த ஏரி நிரம்பி வழிந்தது. இதையடுத்து தற்போது கோடைகாலம் தொடங்கிய நிலையில் ஏரியில் தண்ணீர் குறைந்ததன் காரணமாக நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

இதில் திருத்தலையூரை சுற்றி உள்ள கிராமங்களான கண்ணனூர், மேலக்கொட்டம், கட்டணாம்பட்டி, பெத்துப்பட்டி, பகளவாடி, ஆதனூர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக கலந்து கொண்டனர். அப்போது மீன்பிடி வலைகளை பயன்படுத்தி பொது மக்கள் போட்டிப்போட்டு கொண்டு ஏரியில் மீன்களைப் பிடித்தனர். ஆனால் மீன்கள் குறைந்த அளவே இருந்ததால் மீன்பிடிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். கெண்டை, கெளுத்தி, அயிரை உள்ளிட்ட வகையான மீன்கள் கிடைத்தது.

மணப்பாறை

இதேபோல் மணப்பாறையை அடுத்த ஆவிக்காரபட்டியில் ஆவிக்குளம் உள்ளது. இந்த குளம் சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு பெய்த மழையால் நிரம்பியது. தற்போது, கோடைகாலம் தொடங்கியதால் குளத்தில் தண்ணீர் குறைந்தது.

இதனால் அப்பகுதிமக்கள் ஆவிக்குளத்தில் நேற்று மீன்பிடி திருவிழா நடத்தினர். ஊர் முக்கியஸ்தர்கள் விழாவை தொடங்கி வைக்க கிராம மக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த வலை, கச்சா, கூடை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு குளத்தில் இறங்கி மீன் பிடித்தனர். இதில் விரால், கெண்டை, கெளுத்தி, கட்லா, ஜிலேபி என நாட்டுவகை மீன்கள் சிக்கியது. 4 கிலோ வரை எடையுள்ள மீன்கள் வலையில் சிக்கியதால் மீன் பிடி ஆர்வலர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.


Related Tags :
Next Story