தனியார் வசம் சென்ற மீன்பிடி உரிமம்:வைகை அணையில் ஒரே நாளில் 2 டன் மீன்கள் பிடிபட்டன


தனியார் வசம் சென்ற மீன்பிடி உரிமம்:வைகை அணையில் ஒரே நாளில் 2 டன் மீன்கள் பிடிபட்டன
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வைகை அணையில் மீன்பிடி உரிமை தனியார் வசம் சென்ற நிலையில் ஒரு மாதத்திற்கு பின் நேற்று நடந்த மீன்பிடியில் 2 டன் மீன்கள் பிடிபட்டன.

தேனி

வைகை அணை

ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணையில் கடந்த மாதம் வரை அரசே நேரடியாக மீன்பிடியை நடத்தி வந்தது. வைகை அணை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மீனவர்களை கொண்டு மீன்வளத்துறை மூலம் மீன்கள் பிடிக்கப்பட்டு வந்தது. பிடிபடும் மீன்கள் பங்கு அடிப்படையில், பாதி மீனவர்களுக்கும், மற்றொரு பாதி அரசுக்கும் பிரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அணையில் பிடிக்கப்படும் ஜிலேபி ரக மீன்களுக்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். கடந்த மாதம் வரையில் ஒருநாளைக்கு சராசரியாக 500 கிலோ மீன்கள் பிடிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் வைகை அணையின் மீன்பிடி உரிமையை தனியாருக்கு வழங்க அரசு முடிவு செய்து, அதற்கான ஏலம் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது.

2 டன் மீன்கள்

கோவை சேர்ந்த ஒரு நபர் ரூ.82 லட்சத்துக்கு வைகை அணை மீன்பிடி உரிமையை ஏலம் எடுத்தார். அதன்பின்னர் நிர்வாக நடைமுறை காரணமாக கடந்த ஒரு மாதமாக வைகை அணையில் மீன்பிடி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தனியார் வசம் சென்ற வைகை அணையில் நேற்று காலை மீன்பிடி தொடங்கியது. முதல் நாளிலேயே 2 டன்னுக்கும் அதிகமான மீன்கள் பிடிபட்டன.

குறிப்பாக 11 கிலோ எடையுள்ள ஒரு கட்லா மீனும் பிடிபட்டது. அரசு நடத்திய போது, இதுபோல மீன்கள் அதிகளவில் பிடிக்கப்படாத நிலையில் தனியார் வசம் சென்றதும் அதிகளவில் மீன்கள் பிடிக்கப்பட்டது எப்படி? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தனியார் வசம் சென்ற முதல் நாளிலேயே 2 டன்னுக்கும் மேல் மீன்கள் பிடிக்கப்பட்டது அதிகாரிகளையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


Related Tags :
Next Story