மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் 2 ஆயிரம் விசைபடகுகள் நிறுத்தம்
61 நாள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விசைப்படகுகள் நிறுத்தப்பட்டன. எனவே தடைக்காலம் முடியும் வரை மீன்விலை உயரும் என தெரிகிறது.
ராமேசுவரம்,
61 நாள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விசைப்படகுகள் நிறுத்தப்பட்டன. எனவே தடைக்காலம் முடியும் வரை மீன்விலை உயரும் என தெரிகிறது.
மீன்பிடி தடைக்காலம்
தமிழக கடல் பகுதிகளில் ஆண்டு தோறும் ஏப்ரல்-15 முதல் ஜூன் 14 வரையிலும் மீன்கள் இனப்பெருக்க கால சீசனாக கருதப்படுகிறது.
இந்த காலத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். அதனால் ஆண்டுதோறும் ஏப்ரல்-15 முதல் ஜூன்-14 வரை சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடல் பகுதியில் அனைத்து விசைப்படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்ல அரசால் தடை விதிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடி தடைக்காலமானது நேற்று நள்ளிரவில் தொடங்கியது. இதையொட்டி ராமேசுவரம் பகுதியில் மட்டும் 800-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன.
2 ஆயிரம் விசைப்படகுகள்
பாம்பன், மண்டபம், தொண்டி சோழியகுடி, ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த 61 நாட்கள் தடைக்காலத்தில்தான் பெரும்பாலும் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையில் ஏற்றி, மராமத்து பணிகளில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விலை உயரும்
61 நாள் மீன்பிடி தடைக்கால சீசனில் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாது. ஆனால், வழக்கம்போல் நாட்டுப்படகு மற்றும் பைபர் படகு, சிறிய வத்தைகளில் மீனவர்கள் மீன்பிடிப்பார்கள்.
இதனால் நாட்டுப்படகு மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் பிடித்து வரக்கூடிய அனைத்து வகை மீன்களும், விசைப்படகுகள் கடலுக்கு செல்லும் வரை விலை உயர்ந்தே விற்பனையாகும் என மீனவ சங்கத்தினர் தெரிவித்தனர்.