தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம்:படகுகளை பழுது நீக்கும் பணியில் ஈடுபடும் மீனவர்கள்


தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம்:படகுகளை பழுது நீக்கும் பணியில் ஈடுபடும் மீனவர்கள்
x

தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கி இரு்பதால், வலைகள், படகுகளை பழுது நீக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலத்தையொட்டி மீனவர்கள் படகுகளை பழுதுநீக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 500விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தடைக்காலம்

தமிழக கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலமாக ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வரையறுக்கப்பட்டு உள்ளது.

இந்த காலகட்டத்தில் அதிக அளவில் மீன்கள் பிடிபடுவதால், மீன்வளம் குறைந்து வருவதாகவும் கருதப்பட்டது. இதனால் மீன்களின் இனப்பெருக்க காலத்தில் விசைப்படகு, இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த 15-ந் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்து உள்ளது. அடுத்த மாதம் (ஜூன்) 14-ந் தேதியுடன் தடை காலம் நிறைவடைகிறது. இந்த 61 நாட்கள் தடைக்காலத்தில் விசைப்படகுகள், இழுவைப்படகுகளை கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 245 விசைப்படகுகள் உள்ளன.

சீரமைப்பு

இந்த படகுகளில் ஏற்பட்டு உள்ள பழுதுகளை சரி செய்யும் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு உள்ளனர். விசைப்படகுகளின் மீது துணியை கட்டி பழுது நீக்கும் பணிகளை தொடங்கி உள்ளனர். அதே போன்று மீன்பிடி துறைமுக வளாகத்தில் உள்ள மீன்வலை பின்னும் கூடங்களில் வைத்து மீனவர்கள் சேதம் அடைந்த மீன்வலைகளை மீண்டும் பின்னும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். புதிய வலைகளை பின்னும் பணியிலும் ஈடுபட்டனர்.


Next Story