2 மாதங்களுக்கு பிறகு உற்சாகம்: மீன்பிடித்து கரை திரும்பிய சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள்; ஏராளமான மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சி
தடைகாலம் நிறைவடைந்ததை தொடர்ந்து 2 மாதங்களுக்கு பின் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றதில் ஏராளமான மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
தடைகாலம் நிறைவடைந்ததை தொடர்ந்து 2 மாதங்களுக்கு பின் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றதில் ஏராளமான மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சி அடைந்தனர்.
தடைகாலம்
ஆழ்கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்து குஞ்சு பொரிக்கும் காலமாக ஏப்ரல், மே மாதங்கள் கருதப்படுகிறது. அதனால், இந்த மாதங்களில் விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றால் மீன்களின் இனம் அடியோடு அழிந்து விடும். எனவே, மீன் இனத்தை பாதுகாப்பதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-தேதி வரை கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 15-ந்தேதி மீன்பிடி தடைகாலம் தொடங்கியது. இதனால் கிழக்கு கடற்கரை பகுதியான சின்னமுட்டத்தை தங்கு தளமாக கொண்ட 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் ஓய்வெடுத்தன. மேலும் மீனவர்கள் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவுடன் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் நிறைவடைந்தது. அதைதொடர்ந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்ட 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று அதிகாலை 5 மணியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டு சென்றனர்.
கடந்த 2 மாதங்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க செல்வதால் மீனவர்கள் உற்சாகத்துடன் புறப்பட்டனர். அப்போது விசைப்படகுகள் கடலில் மின்னொளியில் ெஜாலித்தபடி சென்றதை காண முடிந்தது.
ஏராளமான மீன்கள் சிக்கின
மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் இரவு 8 மணி முதல் ஒவ்வொன்றாக வரத்தொடங்கியது. மீனவர்கள் வலையில் வஞ்சிரம் மீன், பாறை, விளமீன், கைகொழுவை, நெடுவா போன்ற உயர் ரக மீன்களும் மற்றும் நெத்திலி, கண்ணன் கொளிச்சாளை உள்ளிட்ட சிறிய வகை ரக மீன்களும் கிடைத்தன.
இந்த மீன்களை ஏலம் எடுப்பதற்காக வெளி மாவட்டங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் குவிந்திருந்தனர். பாறைமீனின் ஒரு பெட்டி விலை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரம் வரை விலை போனது. முதல் நாளான நேற்று சராசரியாக ஒரு விசைப்படகில் ரூ.2 லட்சத்திற்கு மீன்கள் கிடைத்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.