வரைபடத்தில் காணாமல் போன மீனவ கிராமங்கள்


வரைபடத்தில் காணாமல் போன மீனவ கிராமங்கள்
x
தினத்தந்தி 26 Aug 2023 12:15 AM IST (Updated: 26 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட வரைபடத்தில் காணாமல் போன மீனவ கிராமங்கள் தொடர்பாக அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட வரைபடத்தில் காணாமல் போன மீனவ கிராமங்கள் தொடர்பாக அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கி மீனவர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

கூட்டத்தில் மீனவர்கள் பேசுகையில் கூறியதாவது:-

கண்டனம்- வருத்தம்

கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்துக்கு மீனவர்கள் சார்பில் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஆனால் அப்போதெல்லாம் பேசிய அதிகாரிகள் மீனவர்களுடன் கலந்து பேசி, உங்களுடைய ஒப்புதலுடன் தான் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றீர்கள். ஆனால் மாவட்ட நிர்வாகமும், மீன்வளத்துறையும் இந்த திட்ட வரைபடத்தில் மீனவ கிராமங்கள், மீனவ பகுதிகள் விடுபட்டதை சரிசெய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நாங்கள் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து தான், கருத்துக்கேட்பு கூட்டத்தை நிறுத்துவதற்கும், வரைபடத்தை சரிசெய்வதற்கும் உத்தரவு பெற்றுள்ளோம். எனவே அவற்றை சரிசெய்ய கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப வேண்டும். மீனவர்களுக்கு முதல் அதிகாரி மீன்வளத்துறை அதிகாரி ஆவார். ஆனால் அவர்கள் மீனவர்களை பாதுகாப்பதற்கு, தற்போது இந்த கடலோர மேலாண்மை வரைபடத்தில் மீனவர்களுக்கான பயன்பாட்டுத் தலங்களை உட்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கண்டனத்துக்கும், வருத்தத்துக்கும் உரியதாகும்.

குமரி மாவட்ட நிர்வாகமும், மீன்வளத்துறை அதிகாரிகளும் தங்கள் கடமையை உடனடியாக செய்ய வேண்டும். ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடலில் ஏற்படும் சீற்றம் காரணமாக காணாமல் போய் வருகிறார்கள். இவர்களை கண்டுபிடிக்க குளச்சல் பகுதியில் ஹெலிகாப்டர் தளம் அமைத்தும், நிரந்தரமாக ஹெலிகாப்டர் வசதி அமைத்து தர வேண்டும்.

கடல் ஆம்புலன்ஸ் திட்டம்

கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்கவும், பேரிடரில் சிக்கும் மீனவர்களை கரை சேர்க்கவும் கடல் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் கடலில் ஆபத்தில் இருக்கும் மீனவர்களை ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்டறிந்து அருகாமையில் உள்ள கடற்படை கப்பல்கள், கப்பல்கள் போன்றவற்றின் மூலம் விரைந்து மீட்பதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.

குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் இரட்டை மடியை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடித்து வருவதால் மீன்வளம் பாதிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட குஞ்சு மீன்களை பிடித்து வருகிறார்கள். இது தொடர்பாக நேற்று அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதுவரை அந்த படகு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தமிழக அரசு மீனவர்களுக்கு மானிய விலை மண்எண்ணெய் வழங்கி வருகிறது. தற்போது புதிதாக விண்ணப்பித்த பலருக்கும் மண்எண்ணெய் வழங்காமல் உள்ளனர். உடனடியாக மண்எண்ணெய் வழங்காவிட்டால் மீனவர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். மேல்மிடாலம் பகுதியில் மீன்பிடி இறங்குதளம் அமைக்க வேண்டும். கேசவன் புத்தன் துறை பகுதியில் சேதமடைந்த தூண்டில் வளைவை சீரமைக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

அரசுக்கு தெரிவிக்கப்படும்

மீனவர்களின் குறைகள், கோரிக்கைகளுக்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் கூறியதாவது:-

கடலோர மண்டல மேலாண்மை திட்டத்தில் விடுபட்ட குமரி மாவட்ட மீனவ கிராமங்கள், பகுதிகள் போன்றவற்றை சேர்ப்பது தொடர்பான மீனவ பிரதிநிதிகளின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்புலன்ஸ் படகு திட்டத்தை செயல்படுத்துவது சம்பந்தமாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனரால் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக மீனவர்கள் தெரிவித்த கருத்துகளும் அரசுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியம், மீன்வளத்துறை துணை இயக்குனர் காசிநாத பாண்டியன், உதவி இயக்குனர் விஜில் கிராஸ், மீனவ சங்க பிரதிநிதிகள் குரும்பனை பெர்லின், ஜான் அலோசியஸ், ஜோஸ் பில்பின், கேசவன்புத்தன்துறை பஞ்சாயத்து தலைவர் கெபின்ஷா, தூத்தூர் பஞ்சாயத்து தலைவர் லைலா, அருட்பணியாளர்கள் சர்ச்சில், டன்ஸ்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குமரி மத்திய மாவட்ட செயலாளர் மேசியா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story