கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா எருமாடு அருகே பனஞ்சிறா, வெட்டுவாடி, கணபதி நகர், கொன்னச்சால் போன்ற பகுதிகளில் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை புகுந்து வருகிறது. சமீபத்தில் ஒரு ஆட்டை கடித்து கொன்றது. அதே பகுதியில் சிறுத்தை 2 ஆடுகளை கடித்து இழுத்து சென்றது. மேலும் காயமடைந்த 3 ஆடுகளுக்கு எருமாடு கால்நடை டாக்டர் சரண்யா சிகிச்சை அளித்து வருகிறார். சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதனால் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து, கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதையடுத்து கூடலூர் வன கோட்ட அலுவலர் ஓம்காரம் உத்தரவின்படி, சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் குமரன், வனகாப்பாளர் ராபட் வில்சன் மற்றும் ஊழியர்கள் சிறுத்தை புகுந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர். தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.