கடலூரில்இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு தொடக்கம்ஐ.ஜி. கண்ணன் ஆய்வு
கடலூரில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. அதனை வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்திறன் தேர்வு 6-ந் தேதி (அதாவது நேற்று) முதல் 10-ந் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி விளையாட்டு மைதானம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் யாரும் உள்ளே செல்லாதபடி தடுப்பு அமைக்கப்பட்டது. மைதானத்தின் அருகில் இருந்த கடைகளையும் மூட அறிவுறுத்தப்பட்டது.
ஐ.ஜி. ஆய்வு
மேலும் அண்ணா விளையாட்டு மைதானத்தை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதையடுத்து நேற்று உடற்தகுதி தேர்வு தொடங்கியது. இந்த உடற்தகுதி தேர்வுக்கு 876 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், நேற்று முதற்கட்டமாக 451 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்காக விண்ணப்பித்த இளைஞர்கள் காலை முதல் அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு வந்து காத்திருந்தனர். பின்னர் காலை 9 மணியளவில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி நடந்தது. அதனை தொடர்ந்து உயரம் மற்றும் மார்பளவு அளக்கும் பணி நடந்தது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. நேற்று நடந்த உடற்தகுதி தோ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தவா்களில் 65 போ் வரவில்லை.
இந்த உடற்தகுதி தேர்வை வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உடனிருந்தார்.
இன்று 425 பேர்
நேற்று நடந்த உடற்தகுதி தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நாளை மறுநாள் (புதன்கிழமை) கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 அல்லது 400 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் போட்டிகள் நடத்தப்படும். மேலும் இன்று (செவ்வாய்க்கிழமை) 425 பேருக்கு சான்றிதழ் சரிபார்த்தல், உயரம், மார்பளவு அளத்தல், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட உள்ளது.