குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் பொருத்தும் பணி


குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் பொருத்தும் பணி
x

பழனி முருகன் கோவில் மின்இழுவை ரெயில்நிலையத்தில், குளிர்சாதன வசதி கொண்ட ரெயில்பெட்டிகள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திண்டுக்கல்

மின்இழுவை ரெயில்

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள், அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல படிப்பாதையே பிரதானமாக உள்ளது.

இதுதவிர எளிதாக சென்றுவர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் உள்ளன. இதன்மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

பழனி மேற்கு கிரிவீதியில் உள்ள ரெயில்நிலையத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு வெற்றிவேல், வீரவேல், திருப்புகழ் என்ற பெயர்களை கொண்ட 3 மின்இழுவை ரெயில்கள் இயக்கப்படுகிறது. ஒரு ரெயிலில் 40 பக்தர்கள் வரை பயணிக்கலாம்.

குளிர்சாதன வசதிகளுடன்...

இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனி மின்இழுவை ரெயில்நிலையத்துக்கு குளிர்சாதன வசதி, டி.வி என நவீன வசதிகளுடன் கூடிய 2 மின்இழுவை ரெயில்பெட்டிகள் வாங்கப்பட்டது.

இந்த ரெயிலில் சுமார் 72 பேர் வரை பயணிக்க முடியும். இந்த ரெயில் பெட்டிகளை மின்இழுவை ரெயில்நிலையத்தில் பொருத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைக்கருத்தில் கொண்டு பழனி மின்இழுவை ரெயில்நிலையத்தில் நவீன ரெயில் பெட்டிகளை பொருத்துவதற்கான பணிகள் தொடங்கியது. அதாவது நவீன ரெயில் பெட்டிகள் தற்போது உள்ள பெட்டிகளைவிட அகலமானது என்பதால், அடிவாரம் மற்றும் மலைக்கோவில் ரெயில்நிலைய மேடைகளை மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

பணி தீவிரம்

முதற்கட்டமாக ரெயில்நிலைய நடைமேடை பகுதி பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து சீரமைக்கும் பணி நடந்தது. இந்த பணிகள் நிறைவு பெற்றதால், ரெயில் பெட்டிகளை ரெயில்நிலைய தண்டவாளத்தில் பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது. முன்னதாக கிரேன் மூலம் பழைய பெட்டிகள் அகற்றப்பட்டது.

அதன்பின்னர் புதிய ரெயில் பெட்டிகள் ஒவ்வொன்றாக, கிரேன் உதவியுடன் எடுத்து வந்து ரெயில்நிலைய தண்டவாளத்தில் வைக்கப்பட்டது. இதனையடுத்து பெட்டிகள் இயக்கப்படுவதற்கான சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து கோவில் அதிகாரிகள் கூறும்போது, நவீன ரெயில்பெட்டிகளை தண்டவாளத்தில் பொருத்தி இயக்குவதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக ரெயில்பெட்டிகள் தண்டவாள பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் ஐ.ஐ.டி. பொறியாளர்கள் குழுவினர் வந்து பெட்டியை பார்வையிடுவார்கள். தொடர்ந்து அவர்கள் இயக்கி சோதனை செய்வார்கள். சோதனையில், பெட்டிகளில் மாற்றம் செய்வது இருந்தால் அந்த பணிகள் நடைபெறும். அதன்பிறகு அதிகாரிகள் குழு சார்பில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜையுடன் பக்தர்கள் பயணிக்கும் வகையில் சேவை தொடங்கப்படும் என்றனர்.


Next Story