ஐந்துவீட்டு சுவாமி கோவில் சித்திரை பூஜை திருவிழா


தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோவில் சித்திரை பூஜை திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி

உடன்குடி:

செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில் சித்திரை பூஜை திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

ஐந்துவீட்டு சுவாமி கோவில்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை பூஜை திருவிழா 8 நாள் சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 30-ந்தேதி இரவு 7 மணிக்கு கஞ்சி பூஜையுடன் தொடங்கியது. கடந்த மே.1-ந்தேதி இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜையும், இரவு 10 மணிக்கு சுவாமிகளுக்கு மேக்கட்டி கட்டுதல், மறுநாள் அதிகாலை மூன்று மணிக்கு மேக்கட்டி பூஜையும் நடந்தது.

விழா தொடங்கிய நாள் முதல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து, முடிகாணிக்கை ெசலுத்தியும், காது குத்தி நேர்த்திக்கடன் செலுத்தியும், படையல் போட்டும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

அன்னமுத்திரி பிரசாதம்

கோவிலில் தினமும் காலை 7.30 முதல் இரவு 10 மணி வரை முழு நேர சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மே.6-ந்தேதி பகல் 11 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 3 மணிக்கு அன்னமுத்திரி சிறப்பு பூஜையும், தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னமுத்திரி பிரசாதம் வழங்கப்பட உள்ளது. கோவில் தங்கியிருந்து வழிபடும் பக்தர்கள் இந்த பிரசாதத்தை வாங்கிக் கொண்டு, தங்களது வீடுகளுக்கு செல்வார்கள். அங்கு இந்த பிரசாதத்தை நன்கு காய வைத்து பூஜை அறையில் வைத்து வழிபாடு நடத்துவது. வீடுகளில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் போது இந்த பிரசாதத்தை பயன்படுத்துவா். மே.7-ந்தேதி இரவு 7 மணிக்கு கும்பாபிஷேகத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

பலத்த பாதுகாப்பு

விழாவை முந்னிட்டு குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், ஆய்வாளர் பகவதி, கோவில் தக்கார் ராமசுப்பிரமணியன், செயலாளர் ஜெயந்தி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


Next Story