ஒரே நாளில் 5 டன் தேங்காய் கொப்பரை கொள்முதல்


ஒரே நாளில் 5 டன் தேங்காய் கொப்பரை கொள்முதல்
x

தஞ்சை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் ஒரே நாளில் 5 டன் தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் ஒரே நாளில் 5 டன் தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தேங்காய் கொப்பரை

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்குட்பட்ட தஞ்சை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் தஞ்சை, கும்பகோணம், ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் இயங்கி வருகிறது.இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் விலை ஆதரவுத்திட்டத்தின் கீழ் நடப்பு 2023-ம் ஆண்டு அரவைக் கொப்பரையானது 6,200 டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கிலோ ஒன்றிற்கு ரூ.108.60 என்ற வீதத்தில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் கடந்த 1-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 30-ந்தேதி வரை 6 மாத காலங்களுக்கு நடைபெற உள்ளது.

ஒரே நாளில் 5 டன்

இந்த நிலையில் பட்டுக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை கொள்முதல் பணி தொடங்கப்பட்டது. இதில் ஒரே நாளில் 15 விவசாயிகளிடமிருந்து 5 டன் அரவைக்கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. அண்ணாதுரை, விற்பனைக்குழு செயலாளர் சரசு, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மேற்பார்வையாளர் மார்ட்டின் எட்வர்ட் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.மேலும் ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் மூலம் கொப்பரை விற்பனை செய்ய முன்வரும் விவசாயிகள் கொப்பரையின் ஈரப்பதம் 6 சதவீதத்திற்கு குறைவாகவும், பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் 10 சதவீதத்திற்குள்ளும், சுருக்கம் கொண்ட கொப்பரை மற்றும் சில்லுகள் 10 சதவீதத்திற்கு குறைவாகவும் குறைந்தபட்ச சராசரி தரத்துடன் இருக்குமாறும் உறுதி செய்ய வேண்டும்.

விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு

சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி புத்தக நகல் ஆகிய ஆவணங்களுடன் மேற்கூறிய ஒழுங்கு முறை விற்பனை கூடங்களை அணுகி விற்பனை செய்து பயனடையலாம் என்றும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் கொப்பரைக்குரிய கிரயத் தொகையானது தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் நேரடியாக வரவு வைக்கப்படும் என விற்பனைக்குழு செயலாளர் சரசு தெரிவித்துள்ளார்.


Next Story