அறுவடை எந்திரங்களுக்கு கூடுதல் வாடகை நிர்ணயம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுவடை எந்திரங்களுக்கு கூடுதல் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டரிடம் புகார் அளித்தனர்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொது செயலாளர் அன்பழகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் முருகன் மற்றும் விவசாயிகள் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் 'பெல்ட் டைப்' அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ.2 ஆயிரத்து 450 என்று நிர்ணயம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி தற்போது மணிக்கு ரூ.2 ஆயிரத்து 700 வரை நிர்ணயம் செய்கின்றனர். வடகிழக்கு பருவமழையால் மயிலாடுதுறை மாவட்டம் கடுமையான பாதிப்புக்குள்ளானது. இதனால் மகசூல் குறைந்து விவசாயிகள் பாதிப்புக்குள்ளான நிலையில், அறுவடை எந்திரத்தின் வாடகையை உயர்த்தி இருப்பது விவசாயிகளை வேதனையடைய செய்து உள்ளது. எனவே இது குறித்து விசாரணை மேற்கொண்டு அறுவடை எந்திரத்திற்கான வாடகையை முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.