விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 15 லட்சம் கொடிநாள் வசூல் கலெக்டர் தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 15 லட்சம் கொடிநாள் வசூலானதாக கலெக்டர் மோகன் தெரிவித்தார்.
இந்தியாவில் முப்படைகளிலும் பணிபுரியும் வீரர்களின் தியாகத்தையும், வீரச்செயல்களையும் போற்றிடும்வகையில் நாடுமுழுவதும் டிசம்பர் 7-ந்தேதி படைவீரர் கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி நாடுமுழுவதும் கொடிநாள் நன்கொடை வசூலிக்கப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் நிதிகள் அனைத்தும் படைவீரர்களின் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும், பணியின் போது உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வு பணிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் கொடிநாள் நன்கொடை வீசூலை நேற்று கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார். முன்னதாாக அவர் கூறியதாவது:-
ரூ.1 கோடியே 22 லட்சம் நிர்ணயம்
விழுப்புரம் மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு அரசு நிர்ணயித்த கொடிநாள் வசூல் இலக்கு 1 கோடி 17 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ஆகும். இதில், 1 கோடியே 15 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த அண்டுக்கு 1 கோடியே 22 லட்சத்து 39 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அலுவலர்கள் தங்கள் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இலக்கை அடையும் வகையில் பணிசெய்து, முன்னாள் படைவீரர்களின் நலனை பாதுகாப்பதற்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்
என்றார் அவர்.
நிதி உதவி
இதன்பின்னர், கடந்த ஆண்டு கொடிநாள் நிதி இலக்கில் 100 சதவீதம் மற்றும் அதற்கு மேல் நிதி திரட்டிய 26 துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் மோகன் வழங்கினார். மேலும் 5 முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு ரூ.72 ஆயிரம் மதிப்பிலான நிதிஉதவிகளையும் அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, முன்னாள் படைவீரர்கள் நல உதவி இயக்குநர் அருள்மொழி மற்றும் நலஅமைப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.