திண்டிவனத்தில் தம்பதியிடம் 25 பவுன் நகை திருட்டு
திண்டிவனத்தில் தம்பதியிடம் 25 பவுன் நகை திருடு போனது.
திண்டிவனம்,
சென்னை மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் சாமிநாதன் (வயது 51). என்ஜினீயர். இவர் நாகப்பட்டினத்தில் நடந்த உறவினர் இல்ல திருமண விழாவில் பங்கேற்க தனது மனைவியுடன் சென்றிருந்தார்.
அங்கு திருமணம் முடிந்த பின்னர், சாமிநாதனின் மனைவி அணிந்திருந்த 25 பவுன் நகையை ஒரு பையில் வைத்துக்கொண்டு, பஸ்சில் புதுச்சேரிக்கு வந்தனர். அங்கிருந்து திண்டிவனம் வந்து சென்னை செல்ல முடிவு செய்த தம்பதியினர், ஒரு தனியார் பஸ்சில் திண்டிவனம் பஸ்நிலையத்தில் வந்து இறங்கி, பின்னர் வேறு ஒரு பஸ்சில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்கள். வீட்டில் சென்று தான் வைத்திருந்த பையை சாமிநாதன் திறந்து பார்த்த போது, அதில் இருந்த 25 பவுன் நகையை காணவில்லை. மர்ம நபர்கள் அதை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சாமிநாதன் திண்டிவனம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.