முன்னாள் படை வீரர்களின் நலனுக்காக கொடி நாள் நிதி வசூல்
முன்னாள் படை வீரர்களின் நலனுக்காக கொடிநாள் நிதி வசூலை மாவட்ட கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்,
முன்னாள் படை வீரர்களின் நலனுக்காக கொடிநாள் நிதி வசூலை மாவட்ட கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்.
கொடிநாள் நிதி வசூல்
கொடிநாளையொட்டி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டரும், மாவட்ட முப்படை வீரர் வாரியத்தலைவருமான அரவிந்த் படைவீரர் கொடிநாள் நிதி வசூலை நேற்று தொடங்கி வைத்து, முதல் நிதியை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7-ந் ேததி நாடு முழுவதும் கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளில் அரசு, முன்னாள் படைவீரர்களுக்கு அவர்கள் ஆற்றிய தொண்டுகளை நினைவு கூர்ந்து நன்றி பாராட்டி வருகிறது. அதன் அடிப்படையில் அன்றைய தினம் படைவீரர் கொடிநாள் உண்டியல் வசூல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கொடிநாளில் திரட்டப்படும் நிதியானது போர்க்களத்தில் உயிர்நீத்த படைவீரர்களின் குடும்பம், ஊனமுற்ற படைவீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரது விதவைகளின் மறுவாழ்விற்காகவும், நலத்திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் நிதியுதவியை வாரி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
முழு ஒத்துழைப்பு
கடந்த 2021 -ம் ஆண்டு குமரி மாவட்டத்துக்கு கொடிநாள் நிதி வசூலாக ரூ.1 கோடியே 14 லட்சத்து 52 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் ரூ.1 கோடியே 20 லட்சத்து 56 ஆயிரம் வசூல் செய்து அரசுக்கு செலுத்தப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால் தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் ஒரு கோடிக்கு மேல் வசூல் புரிந்து சாதனை புரிந்துள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் அதிக நிதி அளித்திடும் வகையில் அனைத்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்.
கருணைத் தொகை
அதைத்தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கையின் போது உயிர்நீத்த படைவீரரின் மனைவிக்கு கார்கில் நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையாக ரூ.20 லட்சம் வழங்கினார். மேலும் தமிழக கவர்னர் மற்றும் முதல்-அமைச்சரின் கொடிநாள் செய்தி, கொடிநாள் மலரை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் சீனிவாசன், கலெக்டரிடம் வழங்கி அடையாள கொடியும் அணிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் சீனிவாசன் மற்றும் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டனர்.