தர்மபுரியில் குடியரசு தின விழா: கலெக்டர் சாந்தி தேசிய கொடி எற்றினார்-41 பயனாளிகளுக்கு ரூ.82 லட்சத்தில் நலத்திட்ட உதவி
தர்மபுரி:
தர்மபுரியில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் சாந்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து, 41 பயனாளிகளுக்கு ரூ.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
குடியரசு தின விழா
தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா தர்மபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் முன்னிலையில், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து தீயணைப்பு படை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்ட மாணவர் படை மற்றும் மாணவர்களின் பல்வேறு அமைப்புகளின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கலெக்டர் சாந்தி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் படைவீரர் நலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மீன்வளத்துறை, வேளாண்மை உழவர் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 41 பயனாளிகளுக்கு ரூ.82 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி வரும் அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கலெக்டர் சாந்தி பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
கலை நிகழ்ச்சி
விழாவில் கம்பைநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாப்பாரப்பட்டி மற்றும் காரிமங்கலம் அன்னை கஸ்தூரிபா காந்தி பாலிகா உண்டு உறைவிட பள்ளி, இலக்கியம்பட்டி அரசு மாற்றுத்திறனாளிகள் மேல்நிலைப்பள்ளி, அமானிமல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தர்மபுரி விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி நகராட்சி நடுநிலைப்பள்ளி, தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சித்தேரி, வாச்சாத்தி கலசப்பாடி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி ஜவகர் சிறுவர் மன்றம் மற்றும் தர்மபுரி இல்ல குழந்தைகள் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கும், அலங்கார அணி வகுப்பில் கலந்து கொண்டவர்களுக்கும் கலெக்டர் சாந்தி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
போலீஸ் பாதுகாப்பு
விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனி தேவி, தர்மபுரி நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், உதவி கலெக்டர் கீதாராணி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, தாசில்தார் ராஜராஜன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.